Friday, March 18, 2011

தமிழ்க் கடவுள் முருகன்


     நாளை பங்குனி உத்திரம். தமிழ்க் கடவுள் முருகனின் நட்சத்திரம். இங்கு திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் காவடிகள் மதுரை மாநகர் எங்கும் கந்தனின் புகழைப்பாடிக் கொண்டே செல்லும். பழனியில் தெய்வீகத்திருமணம் நடைபெறும். கோலாகலகம் கூடும்.

            கந்தனுண்டு கவலையில்லை .குகன் உண்டு குறைவில்லை
           வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை 

        எனக்கு முருகன் பழக்கமானதைவிட சஷ்டிக்கவசம்தான் முதல் பழக்கம். முருகனின் திருவடிவம் எனக்குள் காட்சியாய் தோன்றியது. சஷ்டிக்கவசத்தின் வாயிலாகவே. சிறு வயதில் தமிழை தப்பில்லாமல் வாசிக்க தெரிந்தபின் எழுத்துகூட்டி வாசித்து பாராயணம் செய்தது கவசத்தைதான். மாலை வேலைகளில் விளக்கேற்றிய பின் பூஜை அறையில் அமர்ந்து கட்டாயம் பாடியே ஆக வேண்டும். வெள்ளியென்றால் மகிஷாசுரமர்த்தினி சுலோகமும் சொல்ல வேண்டும். இதற்கு ஒலி நாடாக்கள் உதவியும் உண்டு. ஆனால் உரத்த குரலில் பாடியே ஆக வேண்டும். அடுத்த அறையிலிருந்து என் அன்னையார் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் கட்டளைக்கு பணிந்து , பயந்து - சமயத்தில் திட்டுகூட விழும். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் அன்றைக்கு கட்டாயமாக கற்றுக்கொண்ட சஷ்டிகவசம் , வாழ்க்கையில் பல முறை நான் இக்கட்டில் இருந்தபோது - கையில் பார்த்து படிக்க கையேடு இல்லாத போது, இருளில் இருந்த போது - அனிச்சையாகவே என் உதடுகள் உச்சரிக்க ஆரம்பித்து விடும். தைரியம் வரும்போது தானாக வழியும் கிடைத்து விடும். சிறிய குழந்தைகளின் மழலைக்கு பிள்ளையார் சுலோகம் போல, பதின் வயது குழந்தகளுக்கு பாதுகாப்பு கவசம் இது. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். ஒலி நாடாக்களையும் பயன்படுத்தலாம். விளக்கம் சொல்லித்தரலாம். எதிர்கால நல்லதிற்காக எதையும் செய்யும் இந்தக் கால பிள்ளைகள் , சஷ்டிகவசத்தின் பெருமையை உணரும்போது வாழ்க்கையின் அர்த்தமும் பிடிபடும்.

1. திருக்கார்த்திகையன்று 36 முறை சஷ்டிகவசம் சொன்னால் வேண்டுதல் பலிக்கும்.

2. பகை அழிப்பதில் வேலவனுக்கு நிகர் யாருமில்லை. அழிப்பது என்றால் எதிரியை அழிப்பது அல்ல. பகையுணர்வை அழித்து விடும்.

3. முருகனுக்கு பால் அபிசேகம் செய்வதால் , மூக்கு நுனியில் சடக்கென வரும் கோபம் அழிந்து விடும்.

4. கோபக்கார கடவுள் என்றேல்லாம் பயப்பட வேண்டாம், அப்பா பிள்ளையென்பதால் கொஞ்சம் கண்டிப்பு. நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டுவார்.

குட்டி சுலோகம்

                    என் தாயும் எனக்கருளும் தந்தையும் நீயே
                   சிந்தாகுலமானவை தீர்த்து எனை ஆண்டு கொள்
                   கந்தா கடம்பா கதிர்வேலா
                   உமையாள் மைந்தா மறை நாயகனே.

     
    முருகனுக்கும் என் குடும்பத்திற்குமான பரவசமான சம்பவங்களை இங்கு நினைத்து மட்டுமே பார்க்கிறேன். நன்றி முருகா!  படத்தில் இரவில் ஒளிரும்பழனி மலை



1 comment:

  1. இரவில் ஒளிரும்பழனி மலை-அற்புதக்காட்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator