Friday, August 12, 2011

மந்திர ஜெபம் செய்யும்போது...

 உருத்திராட்சம்
உருத்திராட்சம் பயன்படுத்தி மந்திரம் சொல்லும்போது குறிப்பிட்ட விசயம் ஜெயம் பெறுவதற்காக இவற்றை பயன்படுத்தலாம்.

ஒரு முகம் - காரிய  சித்தி
இருமுகம் - லட்சுமி கடாட்சம்
மும்முகம் -சகல சித்தி
நான்கு முகம்- அறம், வீடு நல்கும்
ஐந்து - பாவத்தை போக்கும்

உருத்திராட்சத்தின் அளவு

இலந்தையளவு - சுக சௌபக்கியம்
நெல்லியளவு - துக்க நிவாரணம்
கடலை அளவு- சகல சித்தி. பலன் வரையறுக்கு முடியாது
தானமாக உருதிராடசம் வாங்கக் கூடாது. சிறிய மணி விசேசம்

உருத்திராடசத்துடன்

பொன்மணி சேர்த்தால் செல்வம்
முத்து சேர்த்தால்  புகழ்
ஸ்படிகம் சேர்த்தால் சந்தான விருத்தி
பவளம்  - வசியகாமி
வெள்ளி - வாகனகாமி

மந்திரம் சொல்ல ஏற்ற மணிகள்
சிவன் - உருத்திராட்சம்
விஷ்ணு- முத்து
ஸ்படிகம் - சூரியன்
பவளம் - சண்டிகை
தாமிரமணி- ஐய்யப்பன்

மந்திர ஜெபம் சொல்லும்போது கணக்கிட,
விரல்ரேகை - எட்டு பங்கு அதிகம்
பவளம் - ஆயிரம் மடங்கு
ஸ்படிகமணி- பத்தாயிரம் மடங்கு
முத்துமணி -இலட்சம் மடங்கு
தாமிரமணி - 10 லட்சம் மடங்கு
பொன்மணி - கோடி மடங்கு
உருத்திராட்சம் , தர்ப்பை முடி - கணக்கிட முடியாத பலன் தரும்.
கையில் வைத்திருக்கும் மந்திர மாலையின் மணிகளுக்கு எவ்வளவு விசேசம் என்று தெரிந்தது அல்லவா. இனி இவற்றை கையில் வைத்து மந்திரம் சொல்லும்போது தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதும் தவறான விளைவை தரும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெப மாலையில் மணிகளின் எண்ணிக்கை
30 மணி - ஐஸ்வர்யம்
27 மணி- சக்தி
25 மணி - முக்தி
15 மணி - மந்திர சித்தி

கிழக்கு பார்த்து சொன்னால் வசியம்
மேற்கு பார்த்து சொன்னால் - தனம்

மணியை உருட்ட
பெருவிரல் - முக்தி
சுட்டு விரல் - சத்துரு நாசம்
மத்திம விரல் - பொருள்
மோதிர விரல் - சாந்தி
கனிஷ்ட விரல் - யாவும் உண்டாகும்.

நம்மை பார்த்து உள் பக்கமாக மணியை உருட்டினால் நமக்கான மந்தர பலிதம்.
மற்றவர்கெனில் வெளிபக்கமாக உருட்டவேண்டும்.

Wednesday, July 20, 2011

அம்மன் அருள் தரும் ஆடி மாதம்.




      ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடியில் ஐந்து  வெள்ளி கிழமைகள் வருவதுதான் சிறப்பு.  ஆடி வெள்ளியில்  அம்மனுக்கு கூழ் செய்து வணங்கினால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள். ஆடியில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்வது பழக்கம். வீட்டில் சுமங்கலி பூஜை செய்வதும் சிறப்பு. வர லட்சுமி விரதம் இந்த மாதம்தான் வருகிறது. ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவதும் விசேச பலன்களை தரும்.

அம்மனுக்கு கூழ் செய்வது எப்படி?
   ராகி தானியம் வாங்கி வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து பயன்படுத்தலாம் அல்லது சுத்தமான ராகி மாவு  பாக்கெட்டாக கடைகளில் கிடைக்கிறது அதனையும் பயன்படுத்தலாம்.  ஒரு பங்கு மாவிற்கு மூன்று பங்கு நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.  இதனை அடுப்பில் வைத்து கிண்டவும். மாவின் நிறம் மாறி இறுகி வரும். தண்ணீரில் கை வைத்து மாவில் தொட்டால் ஒட்டக் கூடாது. இறக்கி வைத்து விடவும். ஆறிய பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், மோர் சேர்த்து கரைக்கவும். கூழ் தயாரானதும் அம்மனுக்கு படைக்கும் முன் வேப்பிலை சேர்த்து படைக்கவும். உப்பு சேர்ப்பது இல்லை. பக்தர்களுக்கு தரும் போது வேண்டுமானால் உப்பு சேர்த்து தரலாம்.

குல தெய்வத்திற்கு மாவிளக்கு
     பச்சரிசியை ஈரமாவு திரிக்கும் மெஷினில் தந்து அரைத்துக் கொள்ளவும். கால் கிலோ அரிசி எனில் கால் கிலோ நாட்டுச்சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தில் மாவையும் சர்க்கரையையும் கொட்டி ஏலக்காய், பச்சை கற்பூரம் சிறிதளவு பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும். லேசாக தண்ணீர் தெளித்து இறுக்கமாக பிசைந்து குவித்து பிடித்து வைக்கவும். நடுவில் குழி செய்து திரி போட்டு, நெய் ஊற்றி விளக்கை தயார் செய்யவும். விளக்கில் குங்குமப்பொட்டு வைத்து , பூ  வைத்து சாமி முன் குல தெய்வத்தை நினைத்து விளக்கேற்றவும். இதனை ஆடி வெள்ளியில் வீட்டிலேயே செய்யலாம். குலதெயவம் குலம் காக்கும்.
திருவிளக்கு பூஜை
ஆடி வெள்ளியில் சுமங்கலிகள் திருவிளக்கு பூஜை செய்வதும் குடும்பத்திற்கு நல்லது. இதனையும் வீட்டிலேயே செய்லாம். குத்துவிளக்கு குறைந்த பட்சம் இரண்டு முகமாவது தீபமேற்றி , குங்கும அர்ச்சனை செய்து தேவியின் அருளைப்பெறலாம்.

Friday, June 24, 2011

சிவ ஸ்தோத்திரம்


எல்லாவுலகங்களுக்கும் தலைவனே ! ஞான சொருபியே ! முதற்காரணனே! திரிகரணங்களுக்கும் எட்டாதவனே ! உனக்கு வெற்றி உண்டாகுக!
சமான ரஹிதனே! எண்ணுதற்கரியவனே! முழு மங்கல் சொரூபியே! தாணுவே காரண ரஹிதனே! பரமானந்த ஸ்வரூபியே! ஆனந்த காரணனே ! ஈஸ்வரனே! தலைவனே!. திருவருள் சொரூபனே!. உனக்கு ஜயமுண்டாகுக! சர்வாண்டங்களிலும் வியாபித்து இருப்பவனே! யாவற்றுக்கும் மேலானவனே! உனக்கும் மேலாக ஒன்றும் இன்றும் இல்லாதவனே! அழிவில்லாதவனே!. உற்பத்தியில்லாதவனே மாயா அதிதனே!  இந்த பூஜையை அடியேன் செய்ததனால் அடையும் பயனை எளியேன் அடையும்படி திருவருள் செய்யவேண்டும்!

உலகங்கள் யாவற்றுக்கும் தாயாகி உள்ளவளே1 உலக சொரூபியானவளே! பேரழகுடையவளே! மனதில் உண்டாகும் அஞ்ஞானத்தை ஒழிப்பவளே. எல்லா சமயங்களுக்கும் தலைவியே! குணஸ்வரூபியானவளே! நிர்குணஸ்வரூனியே! ஞானிகள் இதயத்தில் எழுந்தருளி இருப்பவளே! ஜய! ஜய! சர்வலோகங்களுக்கும் தலவனான சிவபெருமானுடைய மனைவியாக விளங்குபவளே! தேவர் முதலிய யாவரும் துதி செய்யப் பெற்றவளே! உலகத்தை படைப்பவளே! மங்கலங்களையெல்லாம் உண்டாக்குபவளே! உன்னுடைய திருவடியை என் இதயத்தில் இருத்தி என் ஆவலால் துதித்து என் சிரத்தால் பணிகிறேன்! தேவீ உன்னிடத்திலேயே சர்வாண்டங்களும் லயமடைகின்றன. சூலாயுதம் ஏந்திய எந்தையாகிய சிவபெருமான் உன்னையன்றி பயன் அளித்ததும் இல்லை. ஆகையினால் அண்ட கோடியுள்ள ஆன்மாக்கள் யாவும் உன்னுடைய திருவடிகளுக்கே பணி செய்யும். உன்னுடைய திருவருளை எனக்குத் அருள் செய்ய வேண்டும்வேண்டும்!

ஐந்து திருமுகங்களும் பத்துத் திருகரங்களும் ஸ்படிக நிறமும் உடைய அக்ஷ்ர ரூபியும், பிரம்ம ரூபியும், கலா ரூபியும் ஆகிய சகல நிஷ்கள் வடிவமைந்த சிவமாய் சாந்தியாதீதத்தில் அமர்ந்தருளிய சதாசிவ மூர்த்தி நன்றாக திருவருள் புரிவார். ஆகையால் அப்பெருமானின் திருத்தொடையின்மீது இச்சாசக்தி வடிவமாக பொருந்தி யாவற்றுக்கும் தாயாகி உள்ளவளே, என்னை பாவங்கள் அணுகாதவாறு விலக்கி அழியாத உயர் பதவியை தந்தருள வேண்டும். ஜடா முடியை உடைய சங்கர பகவானும் பர்வத ராஜ புத்திரியாகிய உமா தேவியாரும் அன்புடையவர்களாய் திருவாய் மலர்ந்தருளும் சிவஞானம் ஆகிய இனிய அமுதத்தை அருந்தும் , பிரம்ம தேவனும் திருமாலும் பணிந்து துதி செய்ய விளங்கும் வினாயகக்கடவுளும் முருகக்கடவுளும் எனக்கு திருவருள் செய்ய வேண்டும்!

ஒளிவீசும் ஸ்படிக நிறமுற்று , அடியவர்கள் செய்யும் துதியையே ஆபரணமாக ஏற்கும் சதாசிவ வடிவமாய் சூரியன் போன்ற நிறம் அமைந்த பகவன் சிரோ மூர்த்தியாய் கூறப்பட்டு சாந்தியாதீத பதமாய் விண்ணிடை பொருந்தி அளவிடுவதற்கரிய பஞ்சாட்சரங்களில் இறுதியில் உள்ள யகராஷ்ரமாகிய, ஐந்து தலைகளுடன் கூடி அறிவதற்கு அறியதாய் விளங்கும் ஈசான பிரம்மம் உமாதேவியுடன் அடியேன் பூஜை செய்வதற்கு திருவுளம் இறங்கி என் பாவங்களை அகற்றியருள வேண்டும்!

பாலசூரிய வடிவமாய் விளங்கி தன்னருள் புரியும் சிவபெருமானின் கீழ் திசை முகமாகி சாந்தீபதமாய் ஆன்மாவாய் வாயுவில் வசிப்பதாய் , பஞ்சாட்சரங்களில் நான்காவதாகிய வாகாராட்சரமாய் நான்கு தலைகளுடன் கூடியமர்வதுமாய் விளங்கும் தற்புருஷ பிரம்மம் நெடிய கண்களையுடைய உமாதேவியுடன் கூடி அடியேன் மலர்தூவி அர்ச்சித்த பூஜைக்கு மனமகிழ்ந்து , என் மன மயக்கத்தை அறவே ஒழித்து மகிழ்ச்சியுடன் திருவருள் செய்ய வேண்டும்!

அஞ்ஞன கிரி போன்ற ஆதாரம் உடையதாய் ஈஸ்வரனது தெற்கு முகமாகி கொடுமை வாய்த்த அகோர மூர்த்தியாய் வித்தியாப்தமாய் அக்கினியில் பொருந்தியதாய் பஞ்சாட்சரங்களில் மூன்றாவதாகிய சிகாராட்சரமாய் எட்டுத் தலைகளுடன் விளங்குவதாக உள்ள அகோர பிரம்மம் எளியேனுடைய குற்றங்களை மன்னித்து உமாதேவியாருடன் என் பூஜையை ஏற்று மகிழ்ந்து என் பாவங்களையெல்லாம் ஒழித்து திருவருள் புரிய  வேண்டும்.!

குங்கும நிறமுடையதாய் ஈஸ்வரனது வடக்கு முகமாய் பிரதிஷ்டாபதமுடையதாய் ஜலத்தில் விளங்குவதாய் பஞ்சாட்சர்களில் இரண்டாவதாகிய மகாராடசரமாய் பதிமூன்று தலைகளுடன் விளங்கும் வாமதேவ பிரம்மம் உமாதேவியாருடன் பொருந்தி அடியேன் புல்லறிவால் செய்த பூஜைக்கு மனங்களித்து என் பாபமாகிய கோடையை தணித்து அமுதமாரியை பொழிந்து என்னை கடைத்தேற்ற வேண்டும்.

தங்கம் போன்ற வண்ணமுடையதாய் சங்கு குண்டலங்கள் அணிந்த சிவபெருமானின் மேற்றிசை முகமாய், நிவர்த்தி பதமுடையதாய் பூமியில் விளங்குவதாய் பஞ்சாட்சரங்களில் முதல் எழுத்தாகிய நகாராட்சரமாகி எட்டுத்தலைகளுடன் விளங்கும் சத்தியோஜாத பிரம்மம் உமாதேவியுடன் பொருந்தி நான் விதிமுறைப்படி செய்த அர்ச்சனைக்கு அகமகிழ்ந்து என் வினைப்பயனை அறவே ஒழித்து திருவருள் புரிந்து நல்ல பயனை கொடுக்க வேண்டும்.

சிவபெருமானும் உமாதேவியுமாகிய இருவரும் எனக்கு எப்போதும் நற்பயன்களையே வழங்குவார்களாக! குற்றமற்ற வரத அபயகரங்கள் நற்பயன்களை நாள்தோறும் நல்குமாக. அவ்விருவருடைய சிகைகள் யான் விரும்பியவற்றை தந்தருளுமாக. யாவராலும் துதி செய்யத்தக்க அவருடைய கவசங்கள் குற்றமற்ற பயன்களை தந்துவட்டும். அவர்கள் திருவிழிகள் வேண்டிய பயன்களை கொடுக்குமாக. அவர்களுடைய ஆயுதங்கள் நற்பயன்களை அருளுக!

வாமாதிதவாதி அஷ்ட ருத்திரர்களூம் தத்தம் சக்தியருடன் சிறந்த பயனை வழங்குவாராக . அனந்தனது அஷ்ட வித்தியேஸ்வரர்கள் சக்திகளோடு நற்பயன்களை அளிப்பாராக. பவன் முதலிய எண்மரும் , மாதேவன் முதலிய பதினொருவரும் தத்தம் சக்திகளுடன் நற்பயனை அருளுக. இடபதேவன் தன் எண்ணற்ற பயனை ஈயட்டும். நந்தி, மகாகாளி, சாத்தன், சப்தகன்னியர், வினாயகர் இவர்கள் உயர்ந்த பயன்களை உதவுக. ஜேஷ்டை நற்பயன் தருக. கணாம்பிகை , சதி, மேனை, பார்வதி, உருத்திராணி முதலியோர் மிக்க பயன் தருக. சண்பன், இடபன், பிங்கலன், பிருங்கிவீரன் இவர்கள் எனக்கு மிக்க வல்லமை தருக. கலைமகள், திருமகள், மோகினி, துர்க்கை, உருத்திரர்கள், பிரதமகணங்கள், பூதங்கள் உமாதேவியின் தோழிகள், உருத்திர கன்னிகைகள், சூரியன் முதலிய இவர்கள் ஆவரணத்துடன் நற்பயனை விரைவில் அளிப்பார்களாக. பிரம்மதேவன், சூலப்படை தாங்கிய உருத்திரன், விஷ்ணு முதலியவர்கள் தம் ஆவரணத்துடன் அழியாப்பயன்களை கொடுத்தருள்க. அவர்களது தேவிமார்கள் கெடாத நற்பயன்களை தருவார்களாக.

ஜனகர் முதலான முனிவர்கள் நால்வரும் தட்சன் முதலான பதினோரு பிரம்மாக்களும் நற்பயன்களை கொடுப்பார்களாக. தர்மம், சங்கற்பம், வேதம், இதிகாசம், புராணம், சாஸ்திரங்கள், வித்தைகள், திசைகள், திக்கு பாலகர்கள், சூலம் முதலிய ஆயுதங்கள், ஆகாயத்திலுள்ள கோமாதாக்கள் , வடுகக்கடவுள் நான் விரும்பிய பயனை கொடுத்திடுக. அஷ்டவயிரவர்கள், யோகியர்கள், நாரதன் முதலிய முனிவர்கள் , சாத்தியர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அக்கினிக்கொழுந்து போன்ற சிகைகளுடைய பேய்களீறாகிய தேவ யோனிகள், அசுரகள், அரக்கர்கள், நாகங்கள், கருடர்கள் இவர்கள் நற்பயனளித்திடுக. 

கடல்கள், தீவுகள், நதிகள், ஓடைகள், மலைகள், காடுகள், பசுக்கள், பறவைகள், மரங்கள், கிருமிகள், புவனங்கள், புவனபதிகள், அண்டங்கள்,  அண்டத்தலைவர்கள் பயனளிப்பாராக. வர்ணங்கள், பதங்கள், மந்திரங்கள், தத்துவங்கள், தத்துவங்களில் விளங்கும் தலைவர்கள், பிரம்மாண்டத்தை காக்கும் உருத்திரர்கள், சிவ வித்தை, சிவஸ்தோத்திரம், சிவ புராணம், சிவதர்மம் என்பன எனக்கு மேம்பட்ட பயன்களை தர வேண்டும். சுவேதன் முதல் இலகுளிசன் ஈறாகவுள்ள குரவர்கள் அவரகளுடைய புதல்வர்கள் சைவர்கள் மஹேஸ்வரர்கள், வேதியர் முதலிய வருணத்தவர்கள் சாங்கியம் முதலிய சாஸ்திரத்தின் வழிபட்டவர்கள் இவர்கள் யாவருமே யான் நற்கருமம் செய்ய அருள்புரிவாராகுக.

சௌரம் முதலிய மதங்களில் உள்ளவர்களும், உயர்ந்த சைவ சித்தாந்த மார்க்கத்தில் ஒழுகியவர்களும், பாசுபதத்தில் இருப்பவர்களும், காபாலிகத்தில் பொருந்தியவர்களும் அடியேன் நற்கருமம் செய்ய கிருபை செய்வார்களாக. உத்தர தட்சிண நெறிகளில் உள்ளோர் ஞானத்தை அருள்வாராக. மோட்சலோகமும் ஈஸ்வரனும் இல்லையென்பவர்களும் செய்த நன்றி மறந்தவர்களும் பாசாங்குதாரர்களும் என்னைச் சேராமல் அகல்வார்களாக. தகுதியுடையவர்கள் அருள்வாராக , நல்லோர் மங்கல் வசனம் கூறுவார்களாக. உமாதேவியாரோடும், வினாயகக்கடவுளோடும், முருகக்கடவுளோடும் விளங்கும் சிவபெருமானே திருவருள் புரிவாயாக!
  
விசேச பூஜையின்போது இதனை சொல்லலாம். படித்தாலே இதன் சிறப்பு புரிந்துவிடும் சிறப்பான இந்த தமிழாக்கம் சிவபுராணத்தில் இருக்கிறது. நன்றி பிரேமா பிரசுரம்.  . இது போன்ற பல அரிய சுலோகங்களின் தமிழாக்கம் இந்த புத்தகத்தில் உள்ளது.
 


Wednesday, May 4, 2011

பூஜை அறையில் கவனிக்க வேண்டியவை.

குடும்பத்தில் அமைதி , மகிழ்ச்சி , சீரான செல்வ நிலை, அன்பு இருக்க நாம் செய்ய வேண்டிய சில விசயங்கள்.
விளக்கு
காமாட்சி விளக்கு அல்லது மகா லட்சுமி விளக்கு இருப்பது அவசியம். தினமும் காலையிலே மாலையிலே விளக்கு ஏற்றுவது நல்லது. பித்தளை , வெள்ளி , பஞ்சலோக விளக்குகள் ஏற்றலாம். ஒரு திரி நித்திய பூஜைக்கு ஏற்றலாம். ஆனால் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். சகோதர ஒற்றுமைக்கு இரண்டு திரி. ஐந்து திரி செல்வ வளம் தரும். தெற்கு பார்த்து எரிய விடக்கூடாது. நல்லெண்ணெய் விஷ்ணுவிற்கு, தேங்காய் எண்ணெய் வினாயகருக்கு, நெய் மகாலட்சுமிக்கு, இலுப்ப எண்ணெய் குல தெய்வத்திற்கு உகந்தது. விளக்கெண்ணெய் இனிய இல்லறத்திற்கு உகந்தது. கடலெண்ணெய் மற்ற சமையல் எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. பஞ்சு திரி நல்லது. சிவப்பு நூலில் விளக்கு போடுவது திருமணத்தடை நீக்கும். வாழைத்தண்டு திரி செல்வ வளம் பெருகும். மிகச்சிறப்பாக தாமரைத்தண்டு திரியும், வெள்ளெருக்க வேர் திரியும் சொல்லப் படுகின்றன. கடைகளில் விளக்கேற்றும்போது நெய் ஊற்றி தாமரை இதழ் ஒன்றை விளக்கில் வைத்து தீபமிட்டால் செல்வ வளம் கிட்டும்.
தூபம்
செவ்வாய், வெள்ளியில் தூபமிடுவது வீட்டிற்கு சுபமாகவும், விஷஜந்துக்கள் அண்ட விடாமலும் தடுக்கும். குங்கிலியம் சேர்த்து தூபமிடுவது விசேஷம். நெய், சந்தனம் தூபத்தில் சேர்ப்பது செல்வ வளம் தரும். தேங்காய் நார் சேர்த்து தூபமிட்டால் திருஷ்டி கழியும். சில சமயம் மழைக்காலத்தில் சளித்தொல்லைகள் கூடும் சமயத்தில் மஞ்சள் பொடியுடன் ஓமம் சேர்த்து தூபமிடலாம். குழந்தைகள் இருப்பவர்களும் இதை செய்தால் சளித்தொல்லை இருக்காது.
மற்றவை
தெய்வ படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும், முடியாத போது வடக்கு பார்த்தும் வைக்கலாம். அறையில் வடமேற்கு மூலையில் பூஜை இடத்தை அமைப்பது வீட்டில் வாஸ்து தோஷ்ம் இருந்தாலும் சரி செய்து விடும் தனியாக பூஜை அறை இல்லாத போது நம் தலைக்கு மேற்பட்ட உயரத்தில் சாமி மாடத்தை அமைப்பது நல்லது. எப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் சாமி மாடத்தில் இருப்பது நல்லது. பூஜை அறையை மெழுகி விட்டு சிறிது மஞ்சள் தண்ணீர் தெளிப்பது நல்லது.

மணியடித்து பூஜை செய்வது நல்லது. நிவேதனம் செய்ய எதுவுமே இல்லாத போது உலர்ந்த திராட்சை , கல்கண்டு போன்றவற்றை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் அமைதியும் நிம்மதியும் செல்வவளம் இவை இருக்க பூஜை அறையை சிறிது கவனித்தால் போதும்.
.

Sunday, April 3, 2011

வளம் தரும் வயிரவன்


ஈஸ்வரனின் ஆதி சொரூபங்களில் ஒன்று. வயிரவன், சட்டைனாதர், கால பைரவர், சேத்திர பாலன் அனைத்தும் மற்ற சொரூபங்கள். வயிரவனின் அருள் கிட்டினால் இல்லத்தில் அத்தனையும் நிறையும். மகிழ்வு பொங்கும் என்பது உண்மை. எனக்குத் தெரிந்து , திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில் வயிரவன்பட்டியில் வயிரவன் அருள் பாலிக்கிறார். பௌர்ணமி அன்றும் தேய்பிறை அஸ்டமி அன்றும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். சிவனை வணங்கினால் மோட்சம் மட்டுமே கிட்டும் , பொருளாதார சம்பந்தமான வேண்டுதல்கள் அவரிடம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், வயிரவன், தாயின் கருணையுடன் நம் இல்லத்தை கவனித்துக் கொள்வார். அவருக்கு விருப்பமானது கோபத்தை தவிர்த்து அனைவரிடமும் இன்முகம் காட்டுவது.
ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்

தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீப்த்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.

Friday, March 18, 2011

தமிழ்க் கடவுள் முருகன்


     நாளை பங்குனி உத்திரம். தமிழ்க் கடவுள் முருகனின் நட்சத்திரம். இங்கு திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் காவடிகள் மதுரை மாநகர் எங்கும் கந்தனின் புகழைப்பாடிக் கொண்டே செல்லும். பழனியில் தெய்வீகத்திருமணம் நடைபெறும். கோலாகலகம் கூடும்.

            கந்தனுண்டு கவலையில்லை .குகன் உண்டு குறைவில்லை
           வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை 

        எனக்கு முருகன் பழக்கமானதைவிட சஷ்டிக்கவசம்தான் முதல் பழக்கம். முருகனின் திருவடிவம் எனக்குள் காட்சியாய் தோன்றியது. சஷ்டிக்கவசத்தின் வாயிலாகவே. சிறு வயதில் தமிழை தப்பில்லாமல் வாசிக்க தெரிந்தபின் எழுத்துகூட்டி வாசித்து பாராயணம் செய்தது கவசத்தைதான். மாலை வேலைகளில் விளக்கேற்றிய பின் பூஜை அறையில் அமர்ந்து கட்டாயம் பாடியே ஆக வேண்டும். வெள்ளியென்றால் மகிஷாசுரமர்த்தினி சுலோகமும் சொல்ல வேண்டும். இதற்கு ஒலி நாடாக்கள் உதவியும் உண்டு. ஆனால் உரத்த குரலில் பாடியே ஆக வேண்டும். அடுத்த அறையிலிருந்து என் அன்னையார் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் கட்டளைக்கு பணிந்து , பயந்து - சமயத்தில் திட்டுகூட விழும். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் அன்றைக்கு கட்டாயமாக கற்றுக்கொண்ட சஷ்டிகவசம் , வாழ்க்கையில் பல முறை நான் இக்கட்டில் இருந்தபோது - கையில் பார்த்து படிக்க கையேடு இல்லாத போது, இருளில் இருந்த போது - அனிச்சையாகவே என் உதடுகள் உச்சரிக்க ஆரம்பித்து விடும். தைரியம் வரும்போது தானாக வழியும் கிடைத்து விடும். சிறிய குழந்தைகளின் மழலைக்கு பிள்ளையார் சுலோகம் போல, பதின் வயது குழந்தகளுக்கு பாதுகாப்பு கவசம் இது. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். ஒலி நாடாக்களையும் பயன்படுத்தலாம். விளக்கம் சொல்லித்தரலாம். எதிர்கால நல்லதிற்காக எதையும் செய்யும் இந்தக் கால பிள்ளைகள் , சஷ்டிகவசத்தின் பெருமையை உணரும்போது வாழ்க்கையின் அர்த்தமும் பிடிபடும்.

1. திருக்கார்த்திகையன்று 36 முறை சஷ்டிகவசம் சொன்னால் வேண்டுதல் பலிக்கும்.

2. பகை அழிப்பதில் வேலவனுக்கு நிகர் யாருமில்லை. அழிப்பது என்றால் எதிரியை அழிப்பது அல்ல. பகையுணர்வை அழித்து விடும்.

3. முருகனுக்கு பால் அபிசேகம் செய்வதால் , மூக்கு நுனியில் சடக்கென வரும் கோபம் அழிந்து விடும்.

4. கோபக்கார கடவுள் என்றேல்லாம் பயப்பட வேண்டாம், அப்பா பிள்ளையென்பதால் கொஞ்சம் கண்டிப்பு. நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டுவார்.

குட்டி சுலோகம்

                    என் தாயும் எனக்கருளும் தந்தையும் நீயே
                   சிந்தாகுலமானவை தீர்த்து எனை ஆண்டு கொள்
                   கந்தா கடம்பா கதிர்வேலா
                   உமையாள் மைந்தா மறை நாயகனே.

     
    முருகனுக்கும் என் குடும்பத்திற்குமான பரவசமான சம்பவங்களை இங்கு நினைத்து மட்டுமே பார்க்கிறேன். நன்றி முருகா!  படத்தில் இரவில் ஒளிரும்பழனி மலை



Thursday, March 17, 2011

குல தெய்வம்

       இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது குல தெய்வம் பற்றியே. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் ஒன்று இருக்கும். வழி வழியாக சொல்லப்பட்டு நாம் தெரிந்து கொண்டிருக்கும் தெய்வம். நமக்கே நமக்கென்று அருள் புரிய காத்திருக்கும் தாயுள்ளம் கொண்டது. நமது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் தெய்வசக்தியுடன் இருந்தால் என்ன செய்வோம். தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம். வேண்டியதெல்லாம் கேட்போம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் அங்கேதான் சரணடைவோம். இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்திற்கும் வருந்தி அழைப்போம். எந்த இக்கட்டிலும் கை விடமாட்டார் என்பதும் உறுதி. இவை அத்தனையும் குல தெய்வத்திற்கும் பொருந்தும்.

       என்னவோ தெரியவில்லை, சிலர் மட்டுமே இந்த முக்கியமான தெய்வ சக்தியை மறவாமல் வழிபடுகிறார்கள். மற்றவர்கள்...? அதற்கு பல காரணங்கள் உள்ளன. வேலை, வியாபாரம் என்று பொருளீட்டல் பயணத்தில் வெகு தொலைவு சென்று விடுவது. குடும்ப உறுப்பினர்கள் அனவரும் வெவ்வேறு திசைகளில் இருப்பது. குலதெய்வத்தை கும்பிட அனைவரும் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டும் என்பது மரபு. முடிந்தவரை இதனை பின்பற்றலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை சென்று பார்ப்பதே நல்லது. நம் குழந்தைகள் வருகிறார்
களா என்று ஒரு தாய் போல நாம் வருவதற்காக காத்திருக்கும். தாயை தள்ளி வைத்து மைந்தன் அமைதி அடைவது ஏது?

      முக்கியமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்போகும் போதும், தல யாத்திரைகள் செல்லும் போதும் குலதெய்வத்தை முதலில் வணங்கிக் கிளம்ப வேண்டும். வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒரு உண்டியல் வைத்து அதற்கு சிறிய தொகை ஒன்றை காணிக்கையாக சேர்த்து , உண்டியல் நிரம்பியதும் உரிமைபட்ட குலதெய்வம் கோவிலில் சேர்ப்பிக்க வேண்டும். தல யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடியும். அதே போல திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன் வீட்டிலேயே ஒரு வெள்ளிக் கிழமையன்று பொங்கல் வைத்து பிரார்த்திக்க வேண்டும். இனிதே நடக்கும். நேரில் செல்ல தோது படவில்லையென்றாலும் கோவிலுக்கு பத்திரிக்கை அனுப்பி விட வேண்டும். திருப்பதி வரும் பக்தர்களுக்கு கூட தேவஸ்த்தான வேண்டுகோளில் குலதெய்வம் வணங்கிய பின் கோவிலுக்கு வர வேண்டும் என்று உள்ளது. குல வழக்கப்படி சிவராத்திரியன்று வணங்கலாம். அல்லது இருந்த ஊரிலேயே ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாவிலக்கு செய்து பிரியமுடன் வணங்கலாம்.

        வீட்டில் திருமணத்தடை , சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள் - குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும். புத்தாண்டு பிறக்கப்போகிறது, முதல் வேண்டுதலாக குலதெய்வத்தினை வணங்குவோம். முடிந்தால் வருட இறுதிக்குள் ஒருமுறை சென்று சிறப்பித்து தாய் மனதை குளிரச் செய்யுங்கள்.

 -- நம் குலதெய்வம் பற்றித் தெரியவில்லை எனில் பெரியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய ஜாதகம் கூட குலதெய்வத்தை சொல்லிவிடும். சரியான ஜோதிடரை அணுகி தெரிந்து கொள்ளலாம். 

Friday, March 11, 2011

உன் அருளால் உன் பாதம் வணங்கி



      சிறு வயது முதலே என் பிரியக் கடவுள். சூலாயுதமும் வேலாயுதமும் இல்லாமல் கொழுக்கட்டையும் கையுமாக இருப்பவர் என்பதால் மட்டுமல்ல, அந்த வயதின் இக்கட்டுகளான ஆசிரியரிடமிருந்தும் பரீட்சையிடமிருந்தும் என்னை அனேகமுறை காப்பாற்றி இருப்பவர் என்பதால்தான். தொப்பையை பார்த்து சிரிப்பு வந்தாலும் அவரைப் பார்த்து சிரித்த சந்திரனின் கதையறிந்து முகபாவனையை மாற்றியதுண்டு. வயது ஏற ஏற கடவுள் ஸ்தானத்தில் இருந்து உயர்ந்து நண்பனானவர். அதுதான் அவருடைய தோற்றத்தின் பெருமை. அவருக்குத் தெரியாமல் என் கதையில் எதுவுமில்லை என்று நம்புகிறேன். அவருக்கான எளிய சுலோகம்           
           
             வேழ முகத்து விநாயகனைத் தொழ
                             வாழ்வு மிகுந்து வரும்
            வெள்ளைக் கொம்பன்
                               விநாயகனைத் தொழ
            துள்ளியோடும் தொடர் வினைகளே
                  அப்பம் முப்பழமும் அமுது செய்தருளிய
            தொப்பையப்பனை தொழ வினையகழுமே


      விரதம், வேண்டுதல் என்று பயப்படுபவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் பிள்ளை மனதுடன் வணங்கினால் இஷ்டதெய்வம் ஆகிவிடுவார். (இஷ்ட தெய்வம் என்றால் நம்முடைய இஷ்டம் அல்ல நம்மிடம் இஷ்டம் வைத்திருப்பவர்.). தெரு முனைகளில், ஆற்றங்கரையில் நமக்கு தரிசன தர தயாராக இருப்பவர், எனவே இவரை தினசரி எளிதாக தரிசனம் செய்யலாம்.

சில அறிவியல் விளக்கங்கள்

1. காதை பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும்போது கையால் பிடிக்கப்படும் இடத்தில் உள்ள முக்கிய நரம்பு தூண்டப்பட்டு மூளைக்கு இரத்தஓட்டம் அதிகரிக்கும். இதனால் ஞாபக சக்தி கூடும்.
2. உட்கார்ந்து எழுவது அருமையான உடற்பயிற்சி.
3. பிள்ளையாரின் பிரசாதமாக வழங்கப்படும் எள் கலந்த , எண்ணை சேர்க்காமல் வேக வைக்கப்பட்ட பலகாரங்கள் இதயத்திற்கு நல்லது.


என்றைக்கும் கள்ளமில்லாத மனதை பரிசளிப்பார். வாழ்க்கையின் பாதி பயணம் கடந்த நிலையிலும் அடுத்தவருக்காக சிரிக்கவும் அழவும் என்னால் முடிகிறது என்றால் இவர் அருள்தான் படத்தில் என்னுடைய களிமண் பிள்ளையார். குட்டி பிள்ளையார் என் மைந்தனின் உபயம். வினாயக சதுர்த்திக்கு வந்துவிட்டு மீண்டும் ஆற்றிற்கு சென்றுவிடுவார்.

     

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator