Friday, March 18, 2011

தமிழ்க் கடவுள் முருகன்


     நாளை பங்குனி உத்திரம். தமிழ்க் கடவுள் முருகனின் நட்சத்திரம். இங்கு திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் காவடிகள் மதுரை மாநகர் எங்கும் கந்தனின் புகழைப்பாடிக் கொண்டே செல்லும். பழனியில் தெய்வீகத்திருமணம் நடைபெறும். கோலாகலகம் கூடும்.

            கந்தனுண்டு கவலையில்லை .குகன் உண்டு குறைவில்லை
           வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை 

        எனக்கு முருகன் பழக்கமானதைவிட சஷ்டிக்கவசம்தான் முதல் பழக்கம். முருகனின் திருவடிவம் எனக்குள் காட்சியாய் தோன்றியது. சஷ்டிக்கவசத்தின் வாயிலாகவே. சிறு வயதில் தமிழை தப்பில்லாமல் வாசிக்க தெரிந்தபின் எழுத்துகூட்டி வாசித்து பாராயணம் செய்தது கவசத்தைதான். மாலை வேலைகளில் விளக்கேற்றிய பின் பூஜை அறையில் அமர்ந்து கட்டாயம் பாடியே ஆக வேண்டும். வெள்ளியென்றால் மகிஷாசுரமர்த்தினி சுலோகமும் சொல்ல வேண்டும். இதற்கு ஒலி நாடாக்கள் உதவியும் உண்டு. ஆனால் உரத்த குரலில் பாடியே ஆக வேண்டும். அடுத்த அறையிலிருந்து என் அன்னையார் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் கட்டளைக்கு பணிந்து , பயந்து - சமயத்தில் திட்டுகூட விழும். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் அன்றைக்கு கட்டாயமாக கற்றுக்கொண்ட சஷ்டிகவசம் , வாழ்க்கையில் பல முறை நான் இக்கட்டில் இருந்தபோது - கையில் பார்த்து படிக்க கையேடு இல்லாத போது, இருளில் இருந்த போது - அனிச்சையாகவே என் உதடுகள் உச்சரிக்க ஆரம்பித்து விடும். தைரியம் வரும்போது தானாக வழியும் கிடைத்து விடும். சிறிய குழந்தைகளின் மழலைக்கு பிள்ளையார் சுலோகம் போல, பதின் வயது குழந்தகளுக்கு பாதுகாப்பு கவசம் இது. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். ஒலி நாடாக்களையும் பயன்படுத்தலாம். விளக்கம் சொல்லித்தரலாம். எதிர்கால நல்லதிற்காக எதையும் செய்யும் இந்தக் கால பிள்ளைகள் , சஷ்டிகவசத்தின் பெருமையை உணரும்போது வாழ்க்கையின் அர்த்தமும் பிடிபடும்.

1. திருக்கார்த்திகையன்று 36 முறை சஷ்டிகவசம் சொன்னால் வேண்டுதல் பலிக்கும்.

2. பகை அழிப்பதில் வேலவனுக்கு நிகர் யாருமில்லை. அழிப்பது என்றால் எதிரியை அழிப்பது அல்ல. பகையுணர்வை அழித்து விடும்.

3. முருகனுக்கு பால் அபிசேகம் செய்வதால் , மூக்கு நுனியில் சடக்கென வரும் கோபம் அழிந்து விடும்.

4. கோபக்கார கடவுள் என்றேல்லாம் பயப்பட வேண்டாம், அப்பா பிள்ளையென்பதால் கொஞ்சம் கண்டிப்பு. நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டுவார்.

குட்டி சுலோகம்

                    என் தாயும் எனக்கருளும் தந்தையும் நீயே
                   சிந்தாகுலமானவை தீர்த்து எனை ஆண்டு கொள்
                   கந்தா கடம்பா கதிர்வேலா
                   உமையாள் மைந்தா மறை நாயகனே.

     
    முருகனுக்கும் என் குடும்பத்திற்குமான பரவசமான சம்பவங்களை இங்கு நினைத்து மட்டுமே பார்க்கிறேன். நன்றி முருகா!  படத்தில் இரவில் ஒளிரும்பழனி மலை



Thursday, March 17, 2011

குல தெய்வம்

       இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது குல தெய்வம் பற்றியே. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் ஒன்று இருக்கும். வழி வழியாக சொல்லப்பட்டு நாம் தெரிந்து கொண்டிருக்கும் தெய்வம். நமக்கே நமக்கென்று அருள் புரிய காத்திருக்கும் தாயுள்ளம் கொண்டது. நமது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் தெய்வசக்தியுடன் இருந்தால் என்ன செய்வோம். தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம். வேண்டியதெல்லாம் கேட்போம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் அங்கேதான் சரணடைவோம். இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்திற்கும் வருந்தி அழைப்போம். எந்த இக்கட்டிலும் கை விடமாட்டார் என்பதும் உறுதி. இவை அத்தனையும் குல தெய்வத்திற்கும் பொருந்தும்.

       என்னவோ தெரியவில்லை, சிலர் மட்டுமே இந்த முக்கியமான தெய்வ சக்தியை மறவாமல் வழிபடுகிறார்கள். மற்றவர்கள்...? அதற்கு பல காரணங்கள் உள்ளன. வேலை, வியாபாரம் என்று பொருளீட்டல் பயணத்தில் வெகு தொலைவு சென்று விடுவது. குடும்ப உறுப்பினர்கள் அனவரும் வெவ்வேறு திசைகளில் இருப்பது. குலதெய்வத்தை கும்பிட அனைவரும் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டும் என்பது மரபு. முடிந்தவரை இதனை பின்பற்றலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை சென்று பார்ப்பதே நல்லது. நம் குழந்தைகள் வருகிறார்
களா என்று ஒரு தாய் போல நாம் வருவதற்காக காத்திருக்கும். தாயை தள்ளி வைத்து மைந்தன் அமைதி அடைவது ஏது?

      முக்கியமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்போகும் போதும், தல யாத்திரைகள் செல்லும் போதும் குலதெய்வத்தை முதலில் வணங்கிக் கிளம்ப வேண்டும். வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒரு உண்டியல் வைத்து அதற்கு சிறிய தொகை ஒன்றை காணிக்கையாக சேர்த்து , உண்டியல் நிரம்பியதும் உரிமைபட்ட குலதெய்வம் கோவிலில் சேர்ப்பிக்க வேண்டும். தல யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடியும். அதே போல திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன் வீட்டிலேயே ஒரு வெள்ளிக் கிழமையன்று பொங்கல் வைத்து பிரார்த்திக்க வேண்டும். இனிதே நடக்கும். நேரில் செல்ல தோது படவில்லையென்றாலும் கோவிலுக்கு பத்திரிக்கை அனுப்பி விட வேண்டும். திருப்பதி வரும் பக்தர்களுக்கு கூட தேவஸ்த்தான வேண்டுகோளில் குலதெய்வம் வணங்கிய பின் கோவிலுக்கு வர வேண்டும் என்று உள்ளது. குல வழக்கப்படி சிவராத்திரியன்று வணங்கலாம். அல்லது இருந்த ஊரிலேயே ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாவிலக்கு செய்து பிரியமுடன் வணங்கலாம்.

        வீட்டில் திருமணத்தடை , சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள் - குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும். புத்தாண்டு பிறக்கப்போகிறது, முதல் வேண்டுதலாக குலதெய்வத்தினை வணங்குவோம். முடிந்தால் வருட இறுதிக்குள் ஒருமுறை சென்று சிறப்பித்து தாய் மனதை குளிரச் செய்யுங்கள்.

 -- நம் குலதெய்வம் பற்றித் தெரியவில்லை எனில் பெரியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய ஜாதகம் கூட குலதெய்வத்தை சொல்லிவிடும். சரியான ஜோதிடரை அணுகி தெரிந்து கொள்ளலாம். 

Friday, March 11, 2011

உன் அருளால் உன் பாதம் வணங்கி



      சிறு வயது முதலே என் பிரியக் கடவுள். சூலாயுதமும் வேலாயுதமும் இல்லாமல் கொழுக்கட்டையும் கையுமாக இருப்பவர் என்பதால் மட்டுமல்ல, அந்த வயதின் இக்கட்டுகளான ஆசிரியரிடமிருந்தும் பரீட்சையிடமிருந்தும் என்னை அனேகமுறை காப்பாற்றி இருப்பவர் என்பதால்தான். தொப்பையை பார்த்து சிரிப்பு வந்தாலும் அவரைப் பார்த்து சிரித்த சந்திரனின் கதையறிந்து முகபாவனையை மாற்றியதுண்டு. வயது ஏற ஏற கடவுள் ஸ்தானத்தில் இருந்து உயர்ந்து நண்பனானவர். அதுதான் அவருடைய தோற்றத்தின் பெருமை. அவருக்குத் தெரியாமல் என் கதையில் எதுவுமில்லை என்று நம்புகிறேன். அவருக்கான எளிய சுலோகம்           
           
             வேழ முகத்து விநாயகனைத் தொழ
                             வாழ்வு மிகுந்து வரும்
            வெள்ளைக் கொம்பன்
                               விநாயகனைத் தொழ
            துள்ளியோடும் தொடர் வினைகளே
                  அப்பம் முப்பழமும் அமுது செய்தருளிய
            தொப்பையப்பனை தொழ வினையகழுமே


      விரதம், வேண்டுதல் என்று பயப்படுபவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் பிள்ளை மனதுடன் வணங்கினால் இஷ்டதெய்வம் ஆகிவிடுவார். (இஷ்ட தெய்வம் என்றால் நம்முடைய இஷ்டம் அல்ல நம்மிடம் இஷ்டம் வைத்திருப்பவர்.). தெரு முனைகளில், ஆற்றங்கரையில் நமக்கு தரிசன தர தயாராக இருப்பவர், எனவே இவரை தினசரி எளிதாக தரிசனம் செய்யலாம்.

சில அறிவியல் விளக்கங்கள்

1. காதை பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும்போது கையால் பிடிக்கப்படும் இடத்தில் உள்ள முக்கிய நரம்பு தூண்டப்பட்டு மூளைக்கு இரத்தஓட்டம் அதிகரிக்கும். இதனால் ஞாபக சக்தி கூடும்.
2. உட்கார்ந்து எழுவது அருமையான உடற்பயிற்சி.
3. பிள்ளையாரின் பிரசாதமாக வழங்கப்படும் எள் கலந்த , எண்ணை சேர்க்காமல் வேக வைக்கப்பட்ட பலகாரங்கள் இதயத்திற்கு நல்லது.


என்றைக்கும் கள்ளமில்லாத மனதை பரிசளிப்பார். வாழ்க்கையின் பாதி பயணம் கடந்த நிலையிலும் அடுத்தவருக்காக சிரிக்கவும் அழவும் என்னால் முடிகிறது என்றால் இவர் அருள்தான் படத்தில் என்னுடைய களிமண் பிள்ளையார். குட்டி பிள்ளையார் என் மைந்தனின் உபயம். வினாயக சதுர்த்திக்கு வந்துவிட்டு மீண்டும் ஆற்றிற்கு சென்றுவிடுவார்.

     

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator