Thursday, March 17, 2011

குல தெய்வம்

       இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது குல தெய்வம் பற்றியே. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் ஒன்று இருக்கும். வழி வழியாக சொல்லப்பட்டு நாம் தெரிந்து கொண்டிருக்கும் தெய்வம். நமக்கே நமக்கென்று அருள் புரிய காத்திருக்கும் தாயுள்ளம் கொண்டது. நமது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் தெய்வசக்தியுடன் இருந்தால் என்ன செய்வோம். தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம். வேண்டியதெல்லாம் கேட்போம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் அங்கேதான் சரணடைவோம். இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்திற்கும் வருந்தி அழைப்போம். எந்த இக்கட்டிலும் கை விடமாட்டார் என்பதும் உறுதி. இவை அத்தனையும் குல தெய்வத்திற்கும் பொருந்தும்.

       என்னவோ தெரியவில்லை, சிலர் மட்டுமே இந்த முக்கியமான தெய்வ சக்தியை மறவாமல் வழிபடுகிறார்கள். மற்றவர்கள்...? அதற்கு பல காரணங்கள் உள்ளன. வேலை, வியாபாரம் என்று பொருளீட்டல் பயணத்தில் வெகு தொலைவு சென்று விடுவது. குடும்ப உறுப்பினர்கள் அனவரும் வெவ்வேறு திசைகளில் இருப்பது. குலதெய்வத்தை கும்பிட அனைவரும் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டும் என்பது மரபு. முடிந்தவரை இதனை பின்பற்றலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை சென்று பார்ப்பதே நல்லது. நம் குழந்தைகள் வருகிறார்
களா என்று ஒரு தாய் போல நாம் வருவதற்காக காத்திருக்கும். தாயை தள்ளி வைத்து மைந்தன் அமைதி அடைவது ஏது?

      முக்கியமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்போகும் போதும், தல யாத்திரைகள் செல்லும் போதும் குலதெய்வத்தை முதலில் வணங்கிக் கிளம்ப வேண்டும். வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒரு உண்டியல் வைத்து அதற்கு சிறிய தொகை ஒன்றை காணிக்கையாக சேர்த்து , உண்டியல் நிரம்பியதும் உரிமைபட்ட குலதெய்வம் கோவிலில் சேர்ப்பிக்க வேண்டும். தல யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடியும். அதே போல திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன் வீட்டிலேயே ஒரு வெள்ளிக் கிழமையன்று பொங்கல் வைத்து பிரார்த்திக்க வேண்டும். இனிதே நடக்கும். நேரில் செல்ல தோது படவில்லையென்றாலும் கோவிலுக்கு பத்திரிக்கை அனுப்பி விட வேண்டும். திருப்பதி வரும் பக்தர்களுக்கு கூட தேவஸ்த்தான வேண்டுகோளில் குலதெய்வம் வணங்கிய பின் கோவிலுக்கு வர வேண்டும் என்று உள்ளது. குல வழக்கப்படி சிவராத்திரியன்று வணங்கலாம். அல்லது இருந்த ஊரிலேயே ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாவிலக்கு செய்து பிரியமுடன் வணங்கலாம்.

        வீட்டில் திருமணத்தடை , சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள் - குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும். புத்தாண்டு பிறக்கப்போகிறது, முதல் வேண்டுதலாக குலதெய்வத்தினை வணங்குவோம். முடிந்தால் வருட இறுதிக்குள் ஒருமுறை சென்று சிறப்பித்து தாய் மனதை குளிரச் செய்யுங்கள்.

 -- நம் குலதெய்வம் பற்றித் தெரியவில்லை எனில் பெரியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய ஜாதகம் கூட குலதெய்வத்தை சொல்லிவிடும். சரியான ஜோதிடரை அணுகி தெரிந்து கொள்ளலாம். 

5 comments:

 1. பின்பற்ற வேண்டிய பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. நன்றி இராஜராஜேஸ்வரி

  ReplyDelete
 3. ஆன்மிகம் பற்றிய தங்களின் கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது தொடரட்டும் தாங்கள் பணி
  licsundaramurthy@gmail.com
  www.salemscooby.blogspot.com

  ReplyDelete

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator